
நூல் விமர்சனம் – நா.வே.அருள் கவிஞர் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல” ஒரு சுற்று வாழ்க்கை ********************************* வண்ணதாசனைப் படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”. கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம். “ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்… நிமிடம் நிமிடங்களால் ஆனதே வாழ்க்கை.” காலத்தைப் பற்றிய இந்தக் கவிதைதான் பின் அட்டைப்படம். அட்டை முதல் அட்டை வரை மனசில் ஒட்டிக்கொள்ளும் கவிதை அட்டைகள். இந்தியா விடுதலையாவதற்கு ஒரு மாதம் முன் பிறந்த மகாதேவன்தான் கவிதையில் ஜெயதேவன்! “மீன்காரியின் கை வளையொலியில் ஆதி இசை” கேட்கிற செவிகள்; உதிரும் பழுப்பிலையில் மரத்தைக் காண்கிற கண்கள்; உங்கள் மழையும் எனது மழையும் ஒன்றல்ல என்று உணர்கிற ஞானம் என ஜெயதேவன் கவிதைகள் கடற்கரை மணல்வெளியில் குடை ராட்டினம் போலச் சுற்றிச் சுற்றி வருகின்றன. குதிரை, சிங்கம், புலி, மீன், பெட்டி என வித விதமான இருக்கைகளில் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதமாக உட்கார்ந்திருக்கின்றன. ...